எப்போது பார்த்தாலும் படிப்பு... ப்ளஸ் டூ பாடத்திட்டத்தை ப்ளஸ் 1
படிக்கும் போதே நடத்தும் நிலை என தமிழ்நாடு பல தனியார் பள்ளிகள் மாணவர்களை
சக்கையாக பிழிந்து எடுக்கின்றன.
இப்படி படிக்கவைத்தால் மட்டுமே ப்ளஸ் 2 வில் 1100க்கு மேல் மதிப்பெண் பெற
முடியும் 100 சதவிகித தேர்ச்சியையும் கொண்டு வரமுடியும் என்று கணக்குப்
போடுகின்றன தனியார் பள்ளிகள்.
அரசுப் பள்ளிகளில் பாஸ் செய்தாலே மேல்நிலைப் பள்ளிகளில் பிடித்த குரூப்பில்
படிக்க அட்மிசன் கிடைத்து விடும். ஆனால் தனியார் பள்ளிகளில் குறிப்பாக
ரேங்க் பெறும் பள்ளிகளில் 480க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு
மட்டுமே ப்ளஸ் 1 வகுப்பில் அட்மிசன் கிடைக்கும். தவிர லட்சக்கணக்கில்
பெற்றோரிடம் கறந்து விடுகின்றன. விளம்பர மோகத்தினால் தனியார் பள்ளிகளில்
பணத்தைக் கொட்டும் பெற்றோர்களுக்காகவே இந்தக் கட்டுரை மேற்கொண்டு
படியுங்கள்.
விளம்பர மோகம்
கிராமங்களில் அரசு பள்ளிகள் இருந்தாலும், போதிய கட்டுப்பாடு இல்லாத
காரணத்தினால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் பாடம் நடத்தும்
தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர். காரணம் ரேங்க்
பற்றியும், மார்க் பற்றியும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்யப்படும்
விளம்பரங்கள்தான்.
தனியார் பள்ளிகள்
நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில்
தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகள் அதிகம். ஆண்டுதோறும் மாநிலத்தில் முதலிடம்
பெறுவது இம்மாவட்ட பள்ளிகள்தான் என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றனர்.
லட்சக்கணக்கில் பீஸ்
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் என்றாலும் அதைப்பற்றி
எல்லாம் கவலைப்படாமல் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி படிக்கவைக்கின்றனர்
பெற்றோர்கள். 6ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பது ஒருபுறம் என்றாலும் 9ம்
வகுப்பு, ப்ளஸ் 1 போன்ற படிப்புகளுக்குத்தான் அதிகம் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மிரட்டல்
பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசின் உத்தரவை மதிக்காமல்
தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்கின்றனர். மேலும், மாணவர்கள்
சேர்க்கைக்கு நன்கொடையும் வசூலிக்கின்றனர். இவ்வாறு வசூலிக்கப்படும்
நன்கொடை மற்றும் கல்வி கட்டணங்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்குவதில்லை.
துண்டு சீட்டுகளில் தொகையை மட்டும் குறிப்பிட்டு கொடுக்கின்றனர். அந்த
தொகையை, அங்குள்ள காசாளரிடம் கொடுத்துவிட்டு வர வேண்டியதுதான். பணம்
செலுத்தியதற்கான எந்த ரசீதும் வழங்குவதில்லை. இதுகுறித்து யாரேனும்
கேள்விக் கேட்டால், எங்கள் பள்ளியில் இதுதான் நடைமுறை. இஷ்டப்பட்டால்
பிள்ளையை சேருங்கள். இல்லை என்றால், "டி.சி.,"யை வாங்கிச் செல்லுங்கள் என
மிரட்டுகின்றனர்.
ப்ளஸ் 1 கட் ஆப் மார்க்
இது ஒருபுறம் இருக்க மாநில அளவில் முதலிடம், 100 சதவிகித தேர்ச்சி
என்று விளம்பரம் செய்த கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் ஒன் கட் ஆப்
மதிப்பெண் 483க்கு மேல்தான். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே
அட்மிசன் கொடுத்து அவர்களை மதிப்பெண் மெசின்களாக உருவாக்குகின்றனர்.
100 சதவிகித தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடத்தை நாமக்கல்லில் உள்ள
கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி பிடித்தது. ஆண்டு தோறும் இந்த பள்ளி பிளஸ் 2
பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை காட்டி வருகிறது. இதனால்,
இந்த பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி
வருகின்றனர்.
எவ்வளவு பணம் கேட்டாலும் பிள்ளையை இந்த பள்ளியில் சேர்த்து விட வேண்டும்
என்ற ஆர்வத்தாலும், தங்கள் பிள்ளைகள் இந்த பள்ளியில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவது உறுதி என்ற எண்ணத்தாலும் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம்
லட்சக்கணக்கான பணத்தை கறக்கிறது.
ஜூன் 1ல் அட்மிசன்
அண்மையில் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து
முடிந்துள்ளது. கடந்த 31ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு
வெளியானது. இந்த முடிவு வெளியான அடுத்த நாளே அதாவது ஜூன் 1ஆம் தேதியே இந்த
பள்ளி பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை தொடங்கிவிட்டது.
483 டூ 489 மதிப்பெண்கள்
மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 483 என்று நிர்ணயித்துள்ளது. இதில், 483
முதல் 489 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு கட் ஆப் மார்க் 484 என்று நிர்ணயித்துள்ளது. இதில், 483 முதல்
489 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மட்டுமே பள்ளி நிர்வாகம் இடம்
கொடுத்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இந்த பள்ளி சீட்
வழங்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ப்ளஸ் டூ பாடத்திட்டம்
இது மட்டுமல்லாது ப்ளஸ் டூ பாடத்திட்டத்தினை ப்ளஸ் 1ல் தொடங்கி இரண்டு
ஆண்டுகளுக்கு அதை மட்டுமே படித்த எழுத வைக்கின்றனர். நன்றாக படிக்காத
மாணவர்களுக்கு உடனடியாக டி.சி கொடுத்து வெளியேற்றும் அவலமும் நடைபெறுகிறது
என்பதுதான் உண்மை.
நடவடிக்கை பாயுமா?
அதிக மதிப்பெண்கள் எடுத்த மணாவர்களை பள்ளியில் சேர்த்து 100 சதவீதம்
தேர்ச்சி காட்டுவது தனியார் பள்ளிகளின் வாடிக்கையாகி விட்டது. வருமான
நோக்கத்திற்காக நடத்தப்படும் இப்படிப்பட்ட பள்ளிகள் மீது தமிழக அரசு கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும்
கிரீன் பார்க் பள்ளி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள தனியார்
பள்ளிகளிலும் இதே நிலைதான் உள்ளது. எனவே கல்விக்கட்டணத்திற்கு குழு
அமைத்தது போல ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதகிவித இடங்களை
அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசுப் பள்ளிகளின்
கல்வித்தரத்தை உயர்த்தவேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாகும். பெற்றோர்களே சிந்தியுங்கள்!
நன்றி:தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment